2026ல் தமிழ்நாட்டில் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்கப் போவதாக செங்கோட்டையன் பேசியிருக்கிறார். அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டது போன்ற பாவனையில் பேசுகிறார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சிக்கலில்தான் இருக்கிறார். இரட்டை இலை தப்புமா, பொதுச் செயலாளர் பதவி நிலைக்குமா என்ற தடுமாற்றத்தில் எடப்பாடி பழனிசாமி தத்தளிக்கிறார். அதிமுகவைக் கட்டுக்குள் கொண்டு வர பாஜக முயல்கிறது. அதிமுக பலவீனமாக இருப்பதை திமுக விரும்புகிறது. இந்த நிலையைப் பயன்படுத்தி செங்கோட்டையன் சாதுர்யமாகப் பேசி வருகிறார். அவரை மையமாக வைத்து அதிமுக நகரும் என்ற நிலைக்கு அவர் தொண்டர்களைத் தள்ளுகிறார். அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் ஒரு சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள். கட்சி ஒன்றுபட்டு பலம் பெற வேண்டிய சூழல் வந்தால் அதற்காக எடப்பாடி பழனிசாமியைத் தூக்கி வீச அவர்கள் தயங்க மாட்டார்கள். நெருக்கடி முற்றினால் தன் பதவியைத் துறக்கவும் எடப்பாடி பழனிசாமி தயங்க மாட்டார். தனக்குக் கீழே அஸ்திவாரம் மெல்ல அசைவதை அவர் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார். செங்கோட்டையன் இந்தச் சூழலில் மேலே ஏறிக்கொண்டிருக்கிறார். அவரால் தலைமை என்ற இலக்கை அடைய முடியுமா என்பது இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்துவிடும்.
———-