‘வைத்து’ என்ற சொல்லைப் பயன்படுத்தி நிகழ்வுகளை விளக்கும் செய்தி எழுத்து முறை, கடந்த பத்தாண்டுகளாக அதிகம் இருக்கிறது.
உதாரணமாக…
‘சென்னை கீழ்ப்பாக்கத்தில் வைத்து ரவுடி மொக்கையன் கைது செய்யப்பட்டார்’ என்று எழுதப்படுகிறது.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படிப் பரவலாக எழுதப்பட்டதில்லை.
மலையாளத்தில் இது போன்ற மொழிப் பயன்பாடு உண்டு.
‘உன்னை பஸ் ஸ்டாண்டில் வைத்துப் பார்த்தேன்’ என்ற மொழிப் பயன்பாடுகள் அந்தப் பகுதியில் உண்டு.
கேரள எல்லையான குமரி மாவட்டத்திலிருந்து வந்த செய்தி எழுத்தாளர்கள் (உதவி-ஆசிரியர்கள் என்பது இங்கு இப்படிக் குறிப்பிடப்படுகிறது) சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இது போன்ற செய்திப் பயன்பாட்டைச் செயல்படுத்தினார்கள்.
ஆனால் இப்போது இது அதிகம் ஆகிவிட்டது. அனேகமாக அனைவரும் இப்படிப் பயன்படுத்துகிறார்கள்.
‘பாதிக்கப்பட்ட மாணவியை அவருடைய வீட்டில் வைத்துப் பார்த்து அந்தக் குறிப்பிட்ட தலைவர் ஆறுதல் கூறினார்’ என்று இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வாக்கியங்களில் ‘வைத்து’ என்ற சொல்லை எடுத்துவிட்டாலும் அதன் பொருள் முழுமை பெறும்.
இவற்றில் ‘வைத்து’ என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது செய்தியின் சம்பிரதாய தோற்றம் குறைகிறது. ‘வைத்து’ என்று சொல்லைப் பயன்படுத்தும்போது செய்தி இன்னும் தரை அளவுக்கு வந்துவிடுகிறது.
இதில் தவறு எதுவும் இல்லை.
மேற்சொன்ன வாக்கியங்களில் ‘வைத்து’ என்ற சொல்லைத் தவிர்த்தால் சிறப்பாக இருக்கும்.
———–