மறைந்த ஜெயச்சந்திரன் மிகச் சிறந்த பாடகர். அவரை Legend என்று வர்ணிக்கத்தக்க ஜேசுதாஸோடு ஒப்பிடக்கூடாது. ‘ஒரு கொடியில் இரு மலர்கள்’ என்ற பழைய படத்தில் ‘கண்ணனின் சன்னதியில்’ என்ற பாடலை இந்த இரண்டு சிறந்த பாடகர்களும் பாடி இருக்கிறார்கள். பாடும் முறையில் அவர்களின் வேறுபாட்டை அதில் உணரலாம்.
ஜெயச்சந்திரன் மிகவும் ஆழமான குரலைக் கொண்டவர். ஆனால் சொற்களில் ஒரு தீவிர தன்மையை, சீரியஸ் தொனி கொடுக்கும் பாவனை கொண்டவராக அவர் இருந்தார். உதாரணமாக ‘ராசாத்தி உன்ன’ என்ற பாடலில் அந்த சொல்லில் அவருடைய ஆழ்ந்த சீரியஸ் உணர்வு தெரியும். ‘கொடியிலே மல்லிகைப்பூ’ என்ற சொல்லிலும் அவருடைய ஆழமான தீர்க்கம் புரியும். ‘மஞ்சள் நிலாவுக்கு’ என்ற பாடலில் தொலைந்து போன ஒரு மாய உணர்வின் ஆழத்தை ஒரு தீவிரத் தன்மையோடு அவர் பாவனையில் வடித்திருந்தார்.
சிறந்த பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது வழங்கிய ‘வண்டி மாடு எட்டு வச்சு’ என்ற பாடலில் அவர் துள்ளல் பாவனை கொடுத்தாலும் அதிலும் ஒரு ஆழ்ந்த தீவிரத் தன்மை இருந்தது. ‘முன்னே போகுதம்மா’ என்ற சொல்லில் அதை நாம் உணர முடியும்.
அவருக்கு சவால் கொடுத்த ‘மாஞ்சோலை கிளிதானோ’ என்ற பாடலில் ராகபாவனைகளை மிகவும் அனாயசமாக அவர் வடித்துச் சென்றிருந்தார். ‘விண்ணில் விழுந்த மழைத்துளியே’ பாடல் அவருடைய இயல்பான இசை ஓட்டத்திற்கு உகந்ததாக இருந்தது. ‘சோதனை தீரவில்ல, சொல்லி அழ யாரும் இல்ல’ என்ற பாடலும் அவருடைய கற்பனை வடிவத்திற்கு பொருத்தமாக அமைந்தது.
அவருடைய உச்சரிப்பின் நேர்த்தியான ஏற்றத்தாழ்வுகள் தென்னிந்திய இசை வடிவம் கடந்து வந்த வரலாற்றின் முகடுகளில் இயல்பாகப் பயணம் செய்தது என்று தாராளமாக சொல்லலாம்.
ஜெயச்சந்திரனின் ஆயிரக்கணக்கான பாடல்கள் அவருடைய திரை வல்லமையை பறைசாற்றும்.