மெய்யழகன்.
ச.பிரேம்குமார் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் மெய்யழகன்.
உறவுகளுக்குப் பெயர் இல்லை. உறவுகளே பெயர்கள்தான். உதிர்ந்துபோன உறவுகளின் மறு எதிர்கொள்ளல் வலியும் சிலிர்ப்பும் தரும் வல்லமை கொண்டது.
தஞ்சையில் வீட்டை இழந்து சென்னை வரும் குடும்பத்தில் ஒருவரான அர்விந்த் சாமி, மீண்டும் தங்கை முறை உறவின் திருமணத்திற்கு நீடாமங்கலம் வரும்போது பசையாக ஒட்டிக்கொண்டு பற்று காட்டும் கார்த்தி யார் என்று அறியாமல் தவிக்கும் பதைபதைப்பில், பெயர்களும் உறவின் முறைகளும் எந்த அளவுக்கு முக்கியம் என்ற அவலம் படம் நெடுக வெளிப்படுகிறது.
கடந்த கால நினைவுகளின் ஓட்டத்தில் கதை சொல்வதில் தேர்ந்தவரான இயக்குனர் ச.பிரேம்குமார் காட்சி வடிவத்தில் உணர்வுகளின் திரட்சியை நேர்த்தியாக வடித்திருக்கிறார்.
அர்விந்த் சாமி, கார்த்தி போன்றோரின் நடிப்பு, மெல்லிய இசை ஓட்டம், கேமராவின் ஆழ்ந்த அசைவுகள் என்று உணர்வுகளுக்கு ஆற்றல் தருவதில் அனைத்தையும் இயக்குனர் சரியாகக் கையாண்டிருக்கிறார்.
இறந்து போன காலத்தையும், மறந்து போன உறவுகளையும் நினைத்துப் பார்க்காதவர்களும் மூளையின் ஓரங்களில் மிச்சமிருக்கும் உணர்வுச் சிதறல்களை உயிர்ப்பிக்கக்கூடிய கதைப் போக்கை சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
இரண்டு பாத்திரங்களை முதன்மையாகக் கொண்டு வடிக்கும் காட்சியில் வசனங்களுக்கு ஈடாக அவற்றின் பின்புலமும் அவசியம் என்பது படத்தில் ஆழமாக உருப்பெற்றிருக்கிறது.
அடையாளம் இல்லாமல் ஓடும் மனித வெள்ளத்தின் மெல்லிய ஓரங்களில் நிழலாடும் உணர்வின் நிஜங்களை, வழக்கமான திரையனுபவங்களிலிருந்து வேறுபடுத்திப் படைத்திருக்கிறார் இயக்குனர் ச.பிரேம்குமார்.
நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தப் படம் இருக்கிறது.
————
#meyyazhagan #மெய்யழகன்