தற்போது என்ற சொல்லின் பயன் என்ன?
தற்போது அவரும் மரணத்தைத் தழுவி உள்ள நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மீண்டும் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது…
என்ற வரியில்
‘தற்போது’ என்ற சொல் தேவையற்றது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமாகி பல வாரங்கள் ஆகிவிட்டன.
அதனால்
அவரும் மரணத்தைத் தழுவி உள்ள நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மீண்டும் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது…
என்று சொல்லலாம்.
அவரும் காலமாகிவிட்ட நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மீண்டும் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது…
என்று சொல்லலாம்.
இப்படிச் சொன்னாலே அது தற்போது என்றுதான் பொருள்படும்.
சமீப காலங்களில் ஊடக எழுத்தில், பேச்சில் ‘தற்போது’ என்ற சொல் அதிகம் இடம்பெறுகிறது.
உதாரணமாக,
‘தற்போது உலகச் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்’ என்று ஒரு செய்திவாசிப்பாளர் கூறுவது பொருத்தம் அற்றது.
‘அடுத்து உலகச் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்’ என்று செய்திவாசிப்பாளர் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
‘தற்போது காற்று வேகமாக அடித்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்லலாம்.
‘தற்போது பருப்பு கைவசம் இல்லை’ என்று சொல்லலாம்.
‘தற்போது அவர் உயிருடன் இல்லை’ என்று சொல்லலாம்.
‘தற்போது அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?’ என்று கேட்கலாம்.
‘தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது’ என்று கூற முடியாது.
‘மழைக்காலம் தொடங்கிவிட்டது’ என்று கூறலாம்.
‘இது மழைக்காலம்’ என்று கூறலாம்.
‘தற்போது மழை பெய்கிறது’ என்று சொல்லலாம்.
உதாரணத்திற்கு உதாரணம்…
‘சமீப காலங்களில்’ ஊடக எழுத்தில், பேச்சில் தற்போது என்ற சொல் அதிகம் இடம்பெறுகிறது…
என்று சொல்லலாம்.
‘தற்போது’ ஊடக எழுத்தில், பேச்சில் தற்போது என்ற சொல் அதிகம் இடம்பெறுகிறது…
என்று சொல்லமுடியாது.
இங்கு இருக்கும் இளையராஜா குறித்த செய்தியில், தற்போது என்ற சொல்லுக்குப் பதிலாக சரியான காலம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக,
இன்று அல்லது நேற்று அல்லது சமீபத்தில் அவர் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்றார்…
என்று இருந்திருக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் திருவள்ளுவர் தினம் தொடர்பான செய்தியில்
தமிழ்ப்புலவர்களையும், தமிழ் அறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் தை மாதம் 2-ம் நாளை திருவள்ளுவர் திருநாள் என்று கடைப்பிடிக்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழ் அறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் திருவள்ளுவர் திருநாளன்று சிறப்பித்து வருகிறது….
என்று எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
தற்போது எதற்கு அரசு சிறப்பித்து வருகிறது என்பது குத்துமதிப்பாக இருக்கிறது. அந்த வரியில் செய்தி முழுமை பெறவில்லை என்பதைக் கவனிக்கவும்.
இந்தச் செய்தியில்…
இந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்துக்காக சீனு ராமசாமிக்கு சிறந்த இயக்குனர் விருது மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டது…
என்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ‘நடைபெற்றுவரும்’ என்ற சொல் ‘தற்போது’ என்ற சொல்லுக்கு முழுமை தருகிறது.
இந்தச் செய்தியில்…
தற்போது வெளியாகியிருக்கும் என்னுடைய ஆறாவது நாவல்…
என்பதில்
தற்போது விற்பனையில் இருக்கும் என்னுடைய ஆறாவது நாவல்..
அல்லது
சமீபத்தில் வெளியாகியிருக்கும் என்னுடைய ஆறாவது நாவல்…
என்று இருந்திருந்தால்
பொருத்தமாக இருந்திருக்கும்.
———-