சமீப காலங்களில் செய்திகளில் காலம் மிகவும் இடறுகிறது. முக்கியமாக, கூறினார், கூறியுள்ளார், கூறியிருந்தார், கூறுகிறார், கூறுவார் போன்ற நிலைகளில் காலக் குழப்பம் செய்தி எழுத்தாளர்களிடம் அதிகம் இருக்கிறது.
கொள்ளைச் செய்தி, மரணச் செய்திகளில் இந்தக் காலப் பிழைகள் அதிகம் உண்டு.
உதாரணமாக
பிரபல அரசியல்வாதி குலோத்துங்கனின் பாட்டனார் செங்குன்றன் இன்று இயற்கை எய்தி உள்ளார்
என்று பல செய்தி அறிக்கைகளில் செய்தி எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.
பொதுமக்கள், பேராசிரியர்கள்கூட இது போன்ற செய்திகளை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுகிறார்கள்.
பிரபல அரசியல்வாதி குலோத்துங்கனின் பாட்டனார் செங்குன்றன் இன்று இயற்கை எய்தி விட்டார்
என்றுதான் அது இருக்க வேண்டும்.
ஒருவர் இறந்த பின்னால் அவர் இருக்க முடியாது அல்லவா?
ஒருவர் இறந்து இப்போது இருக்கிறார் என்று சிந்திப்பதும், எழுதுவதும் காலப் பிழை.
கொள்ளைச் செய்திகளில் இது போன்ற காலப் பிழை அதிகம் உண்டு.
உளுந்தூர்பேட்டை அருகே வீரசோழபுரத்தைச் சேர்ந்த குமாரவர்மன் தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது சொந்த ஊரில் அவர் வேறு ஒரு வீடு கட்டியுள்ளார். அங்கு அவர் கடந்த வாரம் சென்றுள்ளார். நேற்று அவர் திரும்பி வந்து பார்த்த நிலையில் வீட்டுக் கதவு உடைபட்டுக் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது சுமார் எட்டு சவரன் தங்க நகைகள், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் திருடு போனது கண்டு அவர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் காவல்துறைக்கு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்துக் கொள்ளையர்களைத் தேடி வருகிறார்கள்.
இப்படித்தான் கொள்ளைச் செய்தி எழுதப்படுகிறது.
நேர் பேச்சில்
குமாரவர்மன் சொந்த ஊருக்குப் போயிருக்காரு. திரும்பி வந்திருக்காரு. வீட்டுக் கதவு உடஞ்சு இருந்ததைப் பார்த்து ஷாக் ஆயிருக்காரு. உள்ளே போய் பார்த்திருக்காரு. எட்டு சவரன் நகை, ரெண்டு லட்சம் கொள்ளை போயிருக்கறதப் பார்த்து ரொம்ப அப்செட் ஆயிட்டாரு. உடனே போலீசுக்கு கம்ளைன் பண்ணியிருக்காரு. போலீஸ் வந்து திருடங்களைத் தேடுதாம்…
என்று சொல்வதுண்டு.
எல்லாம் நேராக, அப்போதே நடந்தது போல விவரிப்பது உண்டு.
இந்தச் செய்தியை இப்படி எழுதினால் சிறப்பாக இருக்கும்.
உளுந்தூர்பேட்டை அருகே வீரசோழபுரத்தைச் சேர்ந்த குமாரவர்மன் தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது சொந்த ஊரில் அவர் வேறு ஒரு வீடு கட்டியுள்ளார். அங்கு அவர் கடந்த வாரம் சென்றிருந்தார். நேற்று அவர் திரும்பி வந்து பார்த்த நிலையில் வீட்டுக் கதவு உடைபட்டுக் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சுமார் எட்டு சவரன் தங்க நகைகள், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் திருடு போனது கண்டு அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் காவல்துறைக்கு புகார் ஒன்றைக் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்துக் கொள்ளையர்களைத் தேடி வருகிறார்கள்.
இதில் அவர் வந்து பார்த்த செய்தியில், கடந்த காலத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. செய்தி எழுதுபவருக்கு எல்லாம் தெரியும் என்பது போல விவரிக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறையினர் ஒரு குற்றச் செயலை விவரிக்கும்போது அனைத்தும் அப்போதே நடப்பது போல விவரிப்பார்கள்.
அது இப்படி இருக்கும்…
குமாரவர்மன் ஊருக்குப் போயிருக்காரு. வந்து பார்த்திருக்காரு. டோர் லாக் உடைஞ்சிருக்கு. உள்ளே போயிருக்காரு. நகை, பணம் திருடு போயிருக்கு. எங்களுக்கு கம்ப்ளைண் பண்ணாரு. நாங்க திருடனைத் தேடிட்டு இருக்கோம்…
என்று காவல்துறையினர் கூறுவார்கள். அது அவர்களுடைய பாணி. முதல் தகவல் அறிக்கை இப்படித்தான் நிகழ்கால முறையில் எழுதப்படுவதால் அவர்கள் அப்படி பேசுகிறார்கள்.
இது போல
பிரமுகர்கள் பேசும் பேச்சு பற்றிகூட காலப் பிழை அதிகம் உண்டாகிவிடுகிறது.