சீமான் கொஞ்சம் கலங்கிவிட்டார்!
பெரியாரைப் பற்றி சீமான் பேசினார். பெரியார் கூறியதாக மனித உறவுகளைப் பற்றி அவர் விளாசினார். அவை அவதூறு என்று பலர் எதிர்த்தார்கள். சீமான் திருப்பி அடித்தார். பெரியாரை காணாமல் அடித்தால் திராவிடம் உடையும் என்று சீமான் எதிர்பார்த்தார். பாஜகவினர் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். அல்லது திமுக நடுங்குகிறது என்று சொல்லும் பாஜகவின் மன நிலை கொண்டவர்கள் சீமானின் அதிரடி கண்டு மகிழ்ந்தார்கள்.
சீமான் திரும்பத் திரும்ப தன் பக்கம் நியாயங்களைப் பேசுகிறார். ஆனால் அவரிடம் முன்பு இருந்த உறுதி இல்லை.
தமிழ்நாட்டு மக்கள் பெரியாரை மனதுள் நிறைத்திருக்கிறார்கள். பெரியாரை அறியாதவர்கள்கூட பெரியார் மீது பற்று கொண்டிருக்கிறார்கள். பெரியாரை மதிப்பவர்களில் 99.9% பேர் இறை நம்பிக்கையாளர்கள். வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்பவர்கள். பெரியார் தமிழ்நாட்டிற்கு ஏதோ செய்திருக்கிறார் என்று நம்புபவர்கள் அவர்கள். பெரியாரைப் பற்றி அறியாதவர்கள்கூட இப்போது அறியத் தொடங்கிவிட்டார்கள்.
நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் முப்பது வயதிற்கு உட்பட்டவர்கள் பலர் பெரியார் தொடர்பான நூல்களை வாங்கினார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆன்மீக நூல்களை வாங்கினார்கள். இருந்தாலும் அவர்களிடமும் பெரியார் இருந்தார்.
பெரியாரை முன்னிறுத்துபவை திராவிடக் கட்சிகள் மட்டும் என்று சொல்லிவிட முடியாது. அனைத்து அரசியல் இயக்கங்களும் பெரியாரை உள்வாங்கி இருக்கின்றன. பாஜகவினரில் பலரும் பெரியாரை மனதளவில் வெறுக்கிறார்களா என்று கூற முடியாது.
பெரியார் ஆழ்ந்து படித்தவர் அல்ல. பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதிதான். அவருடைய கருத்துகளில் பல முரண்பாடானவை. ஆனால் அவருக்கு சரி என்று பட்டதைச் சொல்லியிருக்கிறார்.
பெரியாரின் பிம்பத்தை உடைத்தால் அரசியல் உயர்வு கிடைக்கும் என்று சீமான் எதிர்பார்த்தார். ஆனால் அது அப்படி ஆகவில்லை என்பதை அவர் உணரத் தொடங்கிவிட்டார். தமிழ்நாட்டு மக்கள் பெரியாரை விட்டு வருவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படவில்லை. அதனால் அவருடைய சமீபத்திய செய்தியாளர் கூட்டங்களில் அவருடைய உடல் மொழியில் தளர்வு தெரிகிறது. அவருடைய நோக்கம் நிறைவேறவில்லை என்ற உணர்வு அவரிடம் தெரிகிறது. பெரியாரை ஒழிக்க நினைக்கவில்லை என்று பின்வாங்குகிறார்.
அண்ணாமலைகூட பெரியார் பற்றிய விவாதங்கள் இப்போது அவசியம் அற்றவை என்று கூறுகிறார்.
அரசியல் என்பது ஒரு குறிப்பிட்டக் காலத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் சார்ந்தது அல்ல.
தேர்தல் நேரத்தில் எது முக்கியமோ அதை நோக்கி அரசியல் போகும்.
சீமானும் அதை நோக்கித்தான் போவார்.
இப்போது தொடங்கிய பெரியார் போட்டியில் சீமான் வெற்றி பெறவில்லை என்பதே இன்றைய நிலை.