மனிதன் மீது கார் ஏறக் கூடாது.
என் கார் ஏறியது.
என் அலுவலக வளாகத்தின் கார் நிறுத்துமிடம் இருள் சூழ்ந்து கிடந்தது. அங்கு கீழே ஒருவன் படுத்துக் கிடந்தான். கவனித்தேன். கார் எடுக்கும்போது அது மறந்துபோனது. வண்டியை முன்னே நகர்த்தியபோது எதிலோ ஏறி இறங்கியது போல இருந்தது. ‘அய்யோ அய்யோ’ என்று அலறியபடி அவன் எழுந்தான்.
ஒருவனைக் கொன்றுவிட்டேன் என்று புரிந்தது.
அவன் கார் முன்னால் பதறிக்கொண்டு இருந்தான்.
நான் இறங்கிப் போனேன். இருதயம் அடித்துக்கொண்டது. பயத்தில் கண்கள் இருண்டன.
அவனை நெருங்கினேன். அவன் மெல்லிய தேகம் கொண்டிருந்தான். அழுக்குச் சட்டை அணிந்திருந்தான். வாயில் வெற்றிலை குதப்பியிருந்தான். கடுமையாகக் குடித்திருந்தான். தள்ளாடினான்.
‘நெஞ்சு மேல கார் ஏறி இறங்கிடுச்சு’ என்றான். ‘வண்டி ஓட்டத் தெரியலையா’ என்றான்.
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்றான். மூச்சு வாங்கினான். அவன் தோளைத் தொட்டேன். அவன் கண்கள் செருகிச் சென்றன.
அவன் மீது எந்தக் காயமும் தெரியவில்லை. அவனுடைய நெஞ்சை இலேசாகத் தொட்டேன். அவன் வலி தாங்காமல் தள்ளி நின்றான். நெஞ்சின் தோல் மீது இலேசாகக் கீறல் தெரிந்தது.
‘ஹாஸ்பிடல் போகலாம்’ என்றேன். அவன் எதுவும் பேசவில்லை.
அவன் படுத்துக் கிடந்த போர்வையை உதறி சுவர் ஓரத்தில் தள்ளினான்.
அவன் பெயரைக் கேட்டேன். ‘குமார்’ என்றான். அவன் அந்தப் பகுதியில் கார்களுக்கான மின்சாரப் பணி செய்துவந்தான்.
குமார், அருகில் ஒரு திட்டில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு வியர்த்து வழிந்தது.
மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்தேன்.
’வேண்டாம் சார். சரி ஆகிடும்’ என்றான்.
அந்த நிலையில் அவனை விட முடியாது என்று நினைத்தேன். அவன் கொஞ்ச நேரத்தில் மயங்கி இறந்துபோய்விடக் கூடும் என்று பயந்தேன்.
’வேண்டாம் சார். தைலம் தேய்த்தால் வலி போய்டும்’ என்றான்.
அப்படி அவனை அனுமதிக்க நான் விரும்பவில்லை.
‘கிளம்புங்கள். இப்போது தெரியாது. பிறகு அது பாதிப்பைத் தரும்’ என்றேன்.
‘அட. வேண்டாம் சார். வேணும்னா ஏத்தினீங்க, இல்லையே’ என்று அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
பயமாக இருந்தது. பதற்றத்தில் நான் உதறினேன்.
அவனிடம் என் செல்பேசி எண்ணைக் கொடுத்தேன். அவனுடைய எண்ணையும் நான் வாங்கிக்கொண்டேன்.
வண்டி எடுத்து நகர்ந்தேன்.
காவல் நிலையம் சென்றேன். நடந்ததைக் கூறினேன். என்னை அதிசயமாகப் பார்த்தார்கள். குற்றத்தை வந்து ஒப்புக்கொள்கிறவனின் அவலம் கண்டு நகைப்பது போல் அவர்கள் இருந்தார்கள். நிகழ்விடத்திற்கு வந்து பார்த்தார்கள். அதற்குள் குமார் காணாமல் போயிருந்தான். என் பெயர், முகவரி, தொலைபேசி எண் வாங்கிக்கொண்டு ‘கவலை வேண்டாம். அவசியம் எனில் அழைக்கிறோம்’ என்று சொல்லி காவலர்கள் சென்றார்கள்.
குமார் இறந்துவிடுவானோ, கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுவிடுவானோ என்று நினைத்து என் மூளை படபடத்தது.
எனக்கு வருகிற ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் அவன் மிகுந்த உடல்நலக் குறைபாட்டில் அழைப்பது போலத்தான் இருந்தது.
அந்தப் பயல் மருத்துவமனை வந்து சோதனை செய்துகொண்டிருந்தால் உண்மை நிலையாவது தெரிந்திருக்கும்.
***
என் காரை நான் மிகவும் விரும்பினேன். அதைக் காட்சியகத்தில் பார்த்தபோதே மிகவும் பிடித்துப் போனது. அதன் சக்கரங்களில் கொஞ்சம் சிவப்பு ஒட்டியிருந்தது. ஊழியரிடம் அது இரத்தமா என்று கேட்டேன். அவன் சிரித்துக்கொண்டே புதிய காரின் சக்கரத்தில் இரத்தம் ஒட்டிக் கிடக்குமா என்று கொஞ்சம் நையாண்டி பாவனையில் கூறினான். அந்தக் கண்ணாடி அறையில் எங்கோ ஒட்டியிருந்த ஒரு ஸ்டிக்கரின் எதிரொளிப்புதான் என்று அவன் கூறிவிட்டான். கார் வாங்கி சாலையில் ஓட்டிக் களித்தபோதும் அதன் முன் சக்கரங்களில் சிவப்பு நிறம் ஒட்டிக் கிடந்தது போல எனக்கு இருந்தது. அது சாலையில் தூவிவிடப்பட்ட பெயிண்டாக இருக்கும். அல்லது பூஜைகளுக்காக வீசிச் சென்ற குங்குமம் நிறைந்த பூசணியின் மிச்சமாக இருக்கும். புதிய காரின் சக்கரங்களில் இரத்தம் ஒட்டிக் கிடப்பதில்லை.
***
என் நீண்ட கால கார் ஓட்டும் அனுபவத்தில் எந்த உயிர் மீதும் நான் இடித்ததில்லை. சாலையில் ஊர்ந்துபோகும் எறும்பு போன்ற பூச்சிகள் என் கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும். அதற்காக நான் எப்போதும் வருந்தியிருக்கிறேன்.
***
கண்ணாடியில் என் முகம் ஒரு கொலைகாரன் முகம் போல இருந்தது. தலை முடி சற்று மேலே படிந்திருந்தது. கண்களில் ஒரு தாழ்வு மனப்பான்மை வெறித்தது. உதடு தடித்து பற்கள் வெளித் தெரிந்தன. மோவாயில் இறுக்கமும் தாடைகளில் விடைப்பும் இருந்தன.
குமார் இறந்துபோனால் நான் கொலையாளியா?
நண்பர்கள் எனக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள். நான் தவறுதலாக வண்டியை மோதிவிட்டேன். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் முயன்றேன். வண்டி ஏறி காயம் ஏற்பட்டிருந்தால் அவன் எழுந்து நடமாடியிருக்க மாட்டான். அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆகாது. மேலும் நான் காவல் நிலையத்தில் புகார் கூறிவிட்டேன். இனியும் நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் மனதில் குற்றவுணர்வு இல்லாமல் இருக்க வேண்டும். அச்சம் கூடாது.
ஆனால் என்னால் முடியவில்லை. முடியாது.
***
பெரிய மரம் ஒன்றின் கிளைகள் முறிந்துவிழும் சப்தம் தொடர்ந்து என் செவிகளில் கேட்டபடி இருந்தது. அது ஓர் உயிரின் அழிவின் சைகையாக என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. உலகின் எந்த மூலையிலாவது ஒரு உயிர் அடங்கியிருக்கும். அல்லது அதற்கான தயாரிப்பில் இருக்கும். எல்லா உயிர்களும் மரணம் எனும் மாற்றத்திற்கு உட்பட்டவை. நானும் எப்படியும் ஒரு நாள் இறந்துவிடுவேன். என் காரில் அடிபட்ட குமாரும் ஒரு நாள் இறந்துவிடுவான். அவன் நாளை இறந்துபோகலாம். அல்லது அடுத்த வாரம். அல்லது அதற்கு அடுத்த வாரம். அடுத்த ஆண்டு. எப்போது இறந்தாலும் இந்த மோதலின் விளைவாக அவன் இறந்துபோய்விட்டான் என்றே நான் நினைப்பேன். நான் அதிலிருந்து தப்பிக்க முடியாது. மாட்டேன்.
***
அடுத்த நாள் குமாரை அலுவலக இடத்தில் பார்த்தேன். என் காரை தூரத்தில் பார்த்ததும் அவன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டான். என் இருதயம் அடித்துக்கொண்டது. அவன் அருகில் வண்டி நிறுத்தி இறங்கிக்கொண்டேன். நெஞ்சு வலிக்கிறது என்றான். மருத்துவமனைக்கு அழைத்தேன். வேண்டாம் என்றே மறுத்தான். நான் காவல்துறையினரை அழைத்து வந்தது அவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் அதில் கொஞ்சம் அதிர்ந்துபோயிருந்தான். குற்றம் செய்தும் நான் தப்பித்துவிடுவேன் என்றே அவன் உள்ளுக்குள் உருவகித்து வைத்திருந்தான். நான் அவனை மருத்துவமனைக்கு வர நிர்ப்பந்திப்பது அவனுடைய சூழலில் இருந்த மற்றவர்களுக்கும் புரிந்தது. நான் தவறிலிருந்து ஓடிவிடவில்லை என்று அவர்கள் புரிந்தவர்கள் போல இருந்தார்கள்.
***
அடுத்த இரண்டு வாரம் குமாரைக் காணவில்லை. எனக்குப் பயமாகப் போய்விட்டது. இனி அவனைப் பார்க்க முடியாது என்று கலக்கம் அடைந்தேன். அவன் வீட்டில் சுருண்டு இறந்துபோயிருக்கலாம். அல்லது கடும் வலியால் ஏதோ ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். என்னிடம் அதைச் சொல்லக்கூட பலர் தயங்கியிருக்கலாம். என்னால் ஓர் உயிர் மடிந்துபோக இருந்தது. என்னால் ஒருவன் இறந்துபோவான். நான் மட்டும் உயிர்வாழ்வேன். குற்றவுணர்வோடு.
***
அடுத்த முறை குமார் எதிர்ப்பட்டான். கொஞ்சம் கால் தாங்கி நடந்தான். நான் அருகில் சென்றபோது அவன் கால் பிடித்துக்கொண்டு காலில்தான் கார் ஏறிய வலி என்றான். மருத்துவமனை போகலாம் என்றேன். வேண்டாம் என்று கூறிக்கொண்டான். அவன் என்னிடம் பணம் எதிர்பார்த்தான் போல இருந்தது. நான் அதற்குத் தயாராக இருக்கவில்லை. அது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நான் கொடுக்கும் பணமே போதுமானது என்பது அவனுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. நான் அதற்கு இணங்கவில்லை. அது மட்டுமே அவன் என் மீது சாட்டும் குற்றமாக அவன் கண்களில் தெரிந்தது. அவன் உயிர்வாழ்ந்தால் போதும் என்றே நான் நினைத்தேன்.
அவன் உயிர்வாழ்வானா?
***
என் கார் எதன் மீது ஏறி இறங்கினாலும் அது மனிதன் மீது ஏறி இறங்கியது போலத்தான் எனக்கு இருந்தது. ஒரு கட்டை, அல்லது ஒரு கல், அல்லது ஒரு மூட்டை என்று எதன் மீது சக்கரம் ஏறி இறங்கினாலும் ஒரு மனிதன் முனகிச் செத்துப் போவது போலத்தான் என் செவிகளுக்குக் கேட்டது. என் கார் ஏறி குமார் தினமும் செத்துக்கொண்டிருந்தான். அல்லது குற்றவுணர்வில் நான் மடிந்துகொண்டிருந்தேன்.
***
நகரில் சாலையில் படுத்துக்கொண்டிருந்த ஒருவன் மீது ஒரு நடுத்தர வகை வாகனம் ஏறி இறங்கி அவன் உயிரிழந்தான். கார் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டியவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டான். வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் காப்பீடு பணம் இறந்துபோனவனின் குடும்பத்திற்குச் போய் சேர்ந்தது. இறந்துபோனவன் குமார் போலவே இருந்தான். மீண்டும் ஒரு முறை குமார் கார் ஏறும் நிகழ்வில் சிக்கியிருக்க மாட்டான். அவன் வேறு யாரோவாகத்தான் இருக்க வேண்டும். கார் ஏறி இறந்துபோகிறவர்கள் அனைவரும் குமாராக இருக்க முடியாது. குமார் தொடர்பான நிகழ்விலும் அவனுக்கு அடிபட்டிருந்தால் அவனுக்குக் காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யலாம். அவன்தான் மருத்துவமனைக்கே வராமல் தவிர்த்தானே. அவன் ஏதாவது ஒரு காலத்தில் இறந்துபோனால் அது என்னால்தான் என்ற குற்றவுணர்வைக் கொடுத்து என்னைக் குலைக்கும் செயல் கொண்டவனாக அவன் இருக்கிறானே. எப்போதுதான் என் சுமை நீங்குமோ!
***
அலுவலகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு பெண் கார்களைக் கழுவிக்கொண்டிருந்தாள். சற்றுப் பருத்த தேகம் கொண்டிருந்தாள். எண்ணெய் வழிந்த முகத்தில் ஒரு வசீகரம் இருந்தது. பற்கள் நேர்த்தியாக அமைந்திருந்த விதம் அவளுடைய தோற்றத்தில் பொலிவை அதிகரித்திருக்க வேண்டும். தன் வேலை உண்டு தான் உண்டு என்று அவள் இருந்தாலும் அவளுடைய தலை அசைவும் முகத்தைத் திருப்பும் விதமும் அவள்பால் கண்களைப் பாய வைத்தன. அவளைத் தினமும் பார்க்க முடியவில்லை. அல்லது நான் அலுவலகத்திலிருந்து வண்டி எடுக்கும் நேரம் அவள் எப்போதும் இருக்கவில்லை.
***
வாகனம் நிறுத்தும் இடத்தில் யார் இருந்தாலும் எனக்கு குமார் நினைவாகவே இருந்தது. அவ்வப்போது சிலர் கீழே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்படிச் செய்ய வேண்டாம் வண்டி ஏறி சாகும் ஆபத்து ஏற்படும் என்று நான் எச்சரிக்க நினைத்தேன். நானே அதற்குக் காரணமாக இருந்துவிடலாம் என்றும் கூற நினைத்தேன். கொலைகாரன் என்று பறைசாற்றிக்கொள்வதில் எனக்குத்தான் எத்தனை ஆவல் என்று என்னை என் நண்பர்கள் கடிந்துகொண்டார்கள். நான் கொலை செய்யவில்லை. கொலை செய்துவிட்டது போன்ற மனதுடன் நான் அலைந்துகொண்டிருந்தேன்.
***
என் காரையும் கழுவிச் சுத்தம் செய்யலாமா என்று கார் கழுவும் பெண் ஒரு முறை கேட்டாள். அது என்னிடம் பேசுவதற்காக அவள் ஏற்படுத்திக்கொண்ட சாக்கு என்று எனக்குத் தோன்றியது. அவளுக்குக் கொஞ்சம் பணமும் தேவைப்பட்டிருக்கலாம். என் வீட்டு வளாகத்தின் கார் சுத்தம் செய்யும் பையன் வராத நாள் ஒன்றில் அவளுக்கு அந்தப் பணியை நான் கொடுத்தேன். அவள் கேட்டதைவிட கொஞ்சம் அதிகப் பணம் கொடுத்தபோது மகிழ்ந்து சிரித்தாள். புன்னகை அரசி என்று அவளுக்குப் பட்டம் தந்துவிடலாம்.
***
புன்னகை அரசி சில நாட்கள் வந்தாள். பல நாட்கள் காணாமல் போய்விட்டாள். ஏன் அவள் வரவில்லை என்று கேட்கவும் மனம் ஒப்பவில்லை. அப்படிக் கேட்டு அவளிடம் நட்பு வளர்க்கும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. ஒரு நாள் புன்னகை அரசியின் முகம் வீங்கிக் கிடந்தது. பல் வலி இருக்கலாம் போல் இருந்தது. அதைக் கேட்டபோது அவள் பதில் சொல்லவில்லை. கேட்டிருக்கக் கூடாது என்று நினைத்தேன். அவள் முகத்தில் வீக்கம் கொஞ்சம் குறைந்த பின்னால் எதுவும் நான் கேட்கவில்லை. அவளாகத்தான் வந்து பேசினாள். கணவன் குடித்துவிட்டு அடித்ததால் வந்த வினை சரி ஆகிவிட்டது என்றாள். கவனமாக இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டு நான் கடந்துவிட்டேன். அதற்குப் பிறகு அவள் பல நாள் காணாமலே போனாள்.
***
குமார் அவ்வப்போது எதிர்ப்பட்டான். கார்களின் பானெட்டுக்குள் தலை கவிழ்த்தபடி அவன் வேலை செய்தபடியே இருந்தான். அவன் என்னைப் பார்த்தும் எந்த வினையும் ஆற்றவில்லை. அவன் என்னை உதாசினம் செய்தான். அவன் சாவதற்குத் தயார் ஆகிவிட்டவன் போலவே எனக்கு இருந்தது. அவன் கண்கள் பெருத்துக் காணப்பட்டன. விழித் திரைகளில் இருந்த படலம் அவனுக்குள் உயிர் செல்கள் குறைந்து வருகின்றனவோ என்று எண்ண வைத்தது. எனக்கு இருக்கும் அச்சத்தில் நானே அவனைக் கொன்றுவிடுவேனோ என்று எனக்குத் தோன்றியது. அவன் செத்துவிடக் கூடாது. அப்படிச் செத்தால் நான் வாழ்நாள் முழுக்க உயிர் வலி சுமந்திருக்க வேண்டும்.
***
ஒரு முறை குமாரும் புன்னகை அரசியும் அருகருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தம்பதியினர் என்று எனக்குப் புரிந்தது. புன்னகை அரசியிடம் கேட்டபோது ஆம் என்று சற்று வெட்கத்துடன் ஒப்புக்கொண்டாள். ஆனால் உள்ளூரக் கோபமும் அவளிடம் இருந்தது. கேட்டிருக்கக் கூடாது என்று நினைத்தேன் நான். மறுமுறை குமார் கொண்டு வந்த ஏதோ ஒரு தின்பண்டத்தை மிகுந்த மகிழ்வோடு புன்னகை அரசி ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். கணவன், மனைவி உறவில் இதெல்லாம் இயல்பு என்றுதான் இருந்துவிட்டேன்.
***
புன்னகை அரசி என்னிடம் கொஞ்சம் பேசத் தொடங்கினாள். சாப்பிட்டாகிவிட்டதா, வேலை முடிந்ததா என்ற பேச்சுக்கள் மட்டும் நிகழ்ந்தன. என் வண்டி இடித்த பின்னால் அவளுடைய கணவனுக்கு ஏதாவது பாதிப்பு இருந்ததா என்று கேட்கத்தான் எனக்கு ஆவல் மிகுந்தது. அப்படி ஒரு நிகழ்வு நடந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது போலத்தான் அவள் இருந்தாள். தெரிந்தும் மறைக்கத் தெரிந்த சாதுர்யம் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். நான் சற்றும் எதிர்பார்க்காத கணம் ஒன்றில் அவள் மிகவும் வெளிப்படையாக கோபம் கொப்பளிக்க ஒரு வாக்கியத்தைச் சொன்னாள்:
‘உங்க வண்டி ஏறியே அந்த ஆள் செத்திருக்கணும்.’
***
புத்தாடை அணிந்து புன்னகை அரசி கார் கழுவிக்கொண்டிருந்தாள். நான் கவனிக்கிறேனா என்று ஒரு முறை அவள் ஓரக் கண்ணால் பார்த்துவிட்டாள். அவளுக்கு அருகில் போய் அவளுடைய உடல் நலம் விசாரித்தேன். நலம் என்றாள். அது புடவை குறித்த விசாரிப்புதான் என்று அவளுக்கு நன்றாகப் புரிந்தது. அவள் அன்று முழுக்கப் பூரிப்புடன் இருந்தாள். நான் வீட்டிற்குப் புறப்படும்போது அவள் என்னையே மிகுந்த நன்றியுணர்வுடன் பார்த்தபடி இருந்தாள். அப்போது குமார் என்னைப் பார்த்து வண்டி அருகே வந்தான். ‘இன்னும் நெஞ்சுல வலிக்குது சார்’ என்று அவன் சற்றுக் கோபமாகக் கூறினான்.
***
நான் அலுவலகம் சென்ற ஒரு மதிய நேரத்தில் தொலைவில் குமாரும் புன்னகை அரசியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். என் கார் நெருங்கிய சமயத்தில் அவன் அவளை அடிக்கத் தொடங்கினான். நான் அதிர்ந்துபோய் நிறுத்திவிட்டேன். அவன் என் கார் கண்ணாடியை உடைப்பது போல அருகே வந்து தட்டினான். நான் கண்ணாடியை இறக்கினேன். ‘சார். இவள் மேலே காரை ஏத்துங்க சார்’ என்று அவன் கோபமாகக் கூறினான். எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. அவள் நான் ஆதரவாகப் பார்த்தாலே போதும் என்று என்னை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.
***
இரண்டு நாட்கள் குமாரையும் புன்னகை அரசியையும் காணவில்லை. மீண்டும் என்னைக் கவலை வாட்டியது. ஏதோ ஆகிவிட்டிருக்குமோ என்றுதான் இருந்தது. யாரிடமும் கேட்கும் துணிவில்லை. நான் மிகுந்த கவலையில் இருக்கும்போது குமாரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் சிறிதும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ‘சார், ஆஸ்பத்திரியில இருக்கேன். நெஞ்சு வலிதான்’ என்று அவன் குரல் உடைந்து சொன்னான். அவனைப் பார்க்க உடனே சென்றேன். அரசு மருத்துவமனையில் இருந்தான். மருத்துவமனை மிகவும் சுத்தமாக இருந்தது. எங்கும் எலிகள் ஓடவில்லை. குறைந்த நோயாளிகள் இருந்த அறையில் அவன் இருந்தான். அருகில் அவனுடைய மனைவி இருந்தாள். ‘நெஞ்சுல உங்க கார் ஏறினது இப்போ தெரியுது சார்’ என்றான் அவன். அவனுடைய மனைவி என்னையே உற்றுப் பார்த்தபடி இருந்தாள். இல்லை என்பது போல அவள் கண்களில் சைகை காட்டினாள். அவன் அதைப் புரிந்துகொண்டு அவளைப் பார்த்தான். முறைத்தான். கண்கள் விரித்து நாக்கைத் துருத்தினான். மருத்துவர் வந்தார். என்னை அவனுடைய அதிகாரி என்று நினைத்துக்கொண்டார். ‘ரொம்ப குடிக்கறாரு’ என்றார் அவர். ’ஈரல் கெட்டுடும் போல. கொஞ்சம் கட்டுப்பாடு தேவை’ என்றார் அவர். அவன் மயங்கியவன் போல உறங்கினான்.
***
வீடு அருகே திரும்பி மிகவும் மெதுவாகச் சென்றபோதும் இடது புறம் என் கவனம் பிசகி நின்றிருந்த ஒரு இருசக்கர வாகனம் மீது என் கார் உரசிவிட்டது. அந்த வாகனத்தின் மிதிப் பலகை காரின் பின் சக்கரத்தில் சிக்கி கொஞ்ச தூரம் இழுத்து வந்தது. இறங்கிப் பார்த்தேன். காரின் பக்கவாட்டுப் பகுதி முழுக்க சேதம் ஆகியிருந்தது. கவலையாக இருந்தது. என் கவனம் இப்போது சற்றுக் குறைந்துவிட்டது போலத்தான் ஆகிவிட்டது. காரைப் பழுதுபார்க்கக் கொடுத்து காப்பீடு பெற்று பெயிண்ட் அடித்துச் சரி செய்துவிடலாம். அப்படியே செய்துவிட்டேன். மனிதன் மீது கார் ஏற்றி கொல்லும் அளவுக்கு இது மனச்சிக்கலைக் கொடுத்துவிடாது.
***
உடல் நலம் தேறி குமார் மீண்டும் அந்தப் பகுதியில் உலவினான். அவன் குடிப்பதை நிறுத்திவிட்டவன் போலத்தான் இருந்தான். புன்னகை அரசி கொஞ்சம் அதிகமாகவே புன்னகை பூத்தாள். கொஞ்சம் இளைத்திருந்தாள். பற்கள் அதிகமாக வெளியே தெரிந்தன. கையில் ஒரு பொட்டலம் வைத்திருந்தாள். நான் எதற்கு என்று கேட்கவில்லை. ஆனால் அறியும் ஆவல் கொண்டிருந்தேன். அவள் கூறினாள். அவளுடைய இரண்டு குழந்தைகளுக்காக அவள் தின்பண்டம் வாங்கிக்கொண்டு சென்றாள். கணவனும் மனைவியும் தோளோடு தோள் உரசியபடி அந்தத் தெருவில் நடந்து சென்றார்கள்.
***
அடுத்த நாள் நான் அலுவலகம் சென்றபோது ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது. என் வரவுக்காகக் காத்திருந்தவர்கள் போல அவர்கள் இருந்தார்கள். குமார் இறந்துவிட்டானோ என்று எனக்கு அச்சமாக இருந்தது. காரிலிருந்து இறங்கியவுடன் நேராக ஒருவர் என்னிடம் வந்தார்.
’சார்…குமார் செத்துட்டான் சார்’ என்றார் அவர்.
எனக்கு மூச்சு நின்றுவிடும் போலத்தான் இருந்தது.
‘எப்படி’ என்றேன். நான் அதைக் கேட்டிருக்கக் கூடாது.
‘சம்சாரம் குத்தி கொன்னுடுச்சு’ என்றார் அவர்.
எனக்கு பேச்சு வரவில்லை.
என் காரின் சக்கரத்தில் எங்கிருந்தோ சிவப்பு நிறம் எதிரொளித்தது.
*******
மின்னஞ்சல் ; knijanthan@gmail.com