ALL WE IMAGINE AS LIGHT (ஆல் வி இமாஜின் ஆஸ் லைட்).
ஒளி என்று நாம் கற்பனை செய்துகொள்வது…
பாயல் கபாடியாவின் திரைப்படம் இது. கடந்த ஆண்டு கான் திரைப்பட விழாவில் க்ராண்ட் ப்ரீ விருதைப் பெற்ற படம் இது.
ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று பெண்களைப் பற்றிய இந்தக் கதை மிகவும் எளிமையானது. செவிலியாக இருக்கும் பிரபாவும் அனுவும் நண்பர்கள். திருமணம் முடிந்ததும் வெளிநாடு சென்ற பிரபாவின் கணவன் திரும்பவில்லை. தொடர்பிலும் இல்லாமல் போய்விடுகிறான். அனு ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். சமையல்காரராக இருக்கும் பார்வதி சொந்த கிராமம் சென்று குடியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இந்தச் சிக்கல்களை அந்தப் பெண்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்ற கதைதான் இது.
அருமையான ஒளிப்பதிவு கொண்ட இந்தப் படத்தின் இசையும் குறிப்பிடப்பட வேண்டியது. ஒளிப்பதிவு படத்தின் ஒரு பாத்திரமாக மாறி கதையை வடிவமைத்திருக்கிறது.
திரைக்கதையில் இயக்குனர் பெரிய அளவுக்குக் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார்.
ஏற்கனவே பல முறை சொல்லப்பட்ட கதையின் மறுவுருவாக்கம் போலத்தான் இந்தப் படத்தின் கதையும் உள்ளது.
ஆண்களுக்காகக் காத்திருக்கும் பெண்களும், அவர்களுக்குள் புதைந்து போன அல்லது ஆர்ப்பரிக்கும் காதல் உணர்வுகளும் படத்தின் கீற்றாக அவ்வப்போது வந்து ஒளிர்கின்றன.
கனி கஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே உண்மையும், கற்பனையும் கொண்ட படத்தை இயக்கியிருந்த பாயல் கபாடியா இந்தப் படத்தை முழுக்க கதையம்சம் கொண்ட படமாக இயக்கியிருந்தாலும் அதிலும் ஒரு ஆவணப் படத்தின் ஓட்டங்களும், உணர்வின் ஆழத்தைத் தொடாத அம்சங்களும் நிறைந்தே காணப்படுகின்றன.
நமது நாட்டில் எத்தனையோ ஆண்டுகள் முன்னால் உருவாக்கப்பட்ட பல உன்னதமான பல திரைப்படங்கள் நம் நினைவுக்கு வந்து போவதைத் தடுக்க முடியவில்லை.
#all we imagine as light