சென்னையில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்குத் தொடக்க விழா நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் விழாவினைத் தொடங்கி வைத்தார். முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இந்த விழாவில் மாணவிகள் கருப்புத் துப்பட்டா அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. மாணவிகளின் கருப்புத் துப்பட்டாக்களும், குடைகளும், கருப்புப் பைகளும் அதிகாரிகளால் அனுமதிக்கப்படவில்லை. அவற்றை வாங்கி வைத்து விழா முடிவில் அவர்கள் திரும்பத் தந்தார்கள். அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் முதல்வருக்கு எதிராக யாராவது கருப்புக் கொடி காட்டிவிடுவார்களோ என்று அதிகாரிகள் அஞ்சியிருக்கிறார்கள். இது அரசின் அச்சம் தானே. ஸ்டாலினுக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இப்போது எதிரிகள் இல்லை. கூட்டணி பலத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் திமுக வெல்வது உறுதி. ஆனால் அரசுக்கு எதிராகப் போய்விடுமோ என்று ஒரு கருப்புத் துப்பட்டாவைக் கண்டு ஏன் அரசு நடுங்க வேண்டும்? அப்படி என்றால் மக்களின் மனதை அரசு புரிந்துகொண்டிருக்கிறதா? பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போய்விடும் என்ற எண்ணம் ஆளும் திமுகவுக்கு வந்துவிட்டதா? இவை நல்ல அறிகுறிகளாக இல்லை என்பதே உண்மை.
-January 16, 2025