வென்றார்கள் எடப்பாடி, அமித் ஷா. இருவரும் விடாக் கொண்டன்கள்தான். அண்ணாமலை நீங்க வேண்டும் என்றார் எடப்பாடி. நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவர் ஆகிவிட்டார். அதிமுக-பாஜக கூட்டணி உறுதி ஆகிவிட்டது. எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா கூறிவிட்டார். அதிமுகவுக்கு வர இருந்த அனைத்து ஆபத்துகளும் நீங்கின. மேலும் பல கட்சிகள் கூட்டணியில் சேரும். பன்னீர்செல்வம் தனிக் கட்சி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. டிடிவி அணியில் இருப்பார். எப்படியும் திமுகவின் தொகுதிகளை 117க்குள் சுருக்க அமித் ஷா திட்டமிடுகிறார். இந்தக் கூட்டணியில் அமித் ஷாவுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் பெரிய அளவுக்கு மகிழ்ச்சி இல்லை. கூட்டணி ஆட்சிக்கு பாஜக அடிபோடுகிறது என்பதுதான் அவருடைய தலைவலிக்குக் காரணமாக இருக்கும்.