பேரன்பும் பெருங்கோபமும்
சிறந்த திரை ஆளுமை தங்கர் பச்சான் வெளியீட்டில், சிவபிரகாஷ் இயக்கத்தில் வந்திருக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்.’
படம் சாதி கொடுமையைப் பற்றிப் பேசுகிறது.
‘சாதி பெரிசா, சாமி பெரிசா?’ என்று ஜீவா பாத்திரம் படத்தின் இறுதிப் பகுதியில் கேட்கிறது. படம் முழுக்க இந்த கேள்வி ஊடாடிக் கிடக்கிறது.
படத்தின் தொடக்கத்தில், ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ஜீவா, குழந்தைகளைக் கடத்தினான் என்று கைது செய்யப்படுகிறான். ஆனால் அதற்கான காரணம் ஏன் என்ற வகையில் கதை விரிவடைகிறது. சிறிய வயதில் கண்ட சாதியக் கொடுமை, தன் காதல் மனைவிக்கே, தாய் மூலமாக வீட்டிற்கே வந்துவிட்ட சாதிய வன்முறை என்று பல அம்சங்களைக் கண்டவனாக ஜீவா இருக்கிறான்.
சாதியக் கொடுமையால் ஆணவக் கொலைகள் படத்தில் நடக்கின்றன. மனிதர்கள் எரிக்கப்படுகிறார்கள். கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் மறைந்திருக்கிறாள் என்பதற்காக ஒரு காடே எரிக்கப்படுகிறது.
இத்தனைக்கும் தீர்வு இருக்குமா என்று படம் சொல்கிறது.
சாதி பிறப்பில் இருக்கிறதா, இரத்தத்தில் இருக்கிறதா, வளர்ப்பில் இருக்கிறதா என்று படம் கேள்வி கேட்கிறது.
மனப்போக்குகள் மாறாவிட்டால் சாதிக் கொடுமை தீராது என்ற இயலாமையையும் படம் சொல்லிவிடுகிறது.
படத்தின் நாயகனாக விஜித் பச்சான் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பில் அலாதியான முதிர்ச்சி தெரிகிறது. கண்களில், உதட்டுச் சுழிப்பில், தோள் அசைவில் அவர் தேர்ந்த பாவனைகளைத் தந்துவிடுகிறார்.
படத்தில் மற்றவர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு உருக் கொடுக்கிறது. கருக் கொடுக்கிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் குமார் மாறுபட்ட கோணங்கள் மூலம் கதையின் ஓட்டத்தை வலுவாக்குகிறார்.
சாதியம் சார்ந்த கருவைப் பேசினாலும் படம் ஒரு த்ரில்லர் போன்ற வேகமான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. தேர்ந்த திரைக்கதை இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
படக் குழுவுக்கு வாழ்த்துகள்.
——–