தற்கொலை பற்றிய செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வருகின்றன.
தற்கொலை என்பது செய்துகொள்வது. செய்வது அல்ல.
ஆனால் தலைப்புச் செய்திகளில் இடப்பற்றாக்குறை காரணமாக ’மருத்துவர் தற்கொலை செய்த பின்னணி’ என்று எழுதுவது உண்டு.
ஆனால் விரிவான செய்திகளிலும் ’தற்கொலை செய்த நபர்’ என்று குறிப்பிடுவது பொருத்தமற்றது.
தற்கொலை என்பது ஒருவர் தனக்குத்தானே செய்துகொள்வது. தனக்குச் செய்வது அல்ல.
இந்தச் செய்தியைப் பாருங்கள். பாலமுருகன் குடும்பத்தாருடன் தற்கொலை செய்திருக்கலாம்
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது பொருத்தமானது அல்ல.
இந்தச் செய்தியிலும் தலைப்பில் ’தற்கொலை செய்திருக்கமாட்டார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது பொருத்தமானது அல்ல. இடப்பற்றாக்குறை காரணமாக அப்படி எழுதியிருப்பார்கள்.
ஆனால் அதே செய்தியில் உள்ளே, ’கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதே செய்தியில், ‘சென்னை அண்ணா நகரில் தற்கொலை செய்துகொண்ட’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்கொலை பற்றிய செய்தியில் ஒருவர் செய்துகொண்டார் என்றுதான் குறிப்பிட வேண்டும். தற்கொலை செய்தார் என்று குறிப்பிடுவது பொருத்தம் ஆகாது.
———–