ட்ராகன்
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ’ட்ராகன்’ திரைப்படம் உள்ளது.
குற்றத்திற்கும் தண்டனைக்கும் பெரிய இடைவெளி இல்லாதபடியாகத்தான் வணிகப் படங்களின் கதையினுடைய நியாயங்கள் இருக்கும்.
குற்றம் சுடுவதும், வாழ்நாள் முழுக்க அது துரத்துவதும், தவறு புரிந்து நேர்வழி தேடுவதும் ஒரு கதையாக இருந்தும் ’ட்ராகன்’ பெரு வெற்றி பெற்றிருக்கிறது.
பொய் சொல்லத் துரத்தும் அதே சமூகம்தான் உண்மையை வலியுறுத்தியும் துரத்தும் என்ற இரு முனை முரண்பாட்டை, ‘ட்ராகன்’ கதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
அடிக்குரலின் ஆழத்திலிருந்து உணர்ச்சிகளைக் கொட்டும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் நவீன கால இளைஞர் ஒருவரின் வாழ்க்கை முகடுகளும், தன்னிரக்கப் பள்ளங்களும் புதுப் பொலிவுடன் பிரதிபலித்திருக்கின்றன.
ஜார்ஜ் மரியான் சித்தரித்துள்ள தந்தை பாத்திரம் பொருளாதார தாராளமயத்தின் புதிய உணர்வுத் தளத்தை அவலத்துடன் சித்தரிக்கிறது.
பிரதீப் ரங்கநாதனின் முன்னாள் காதலியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் வடிக்கும் கண்ணீர், உறவை இழந்த இளைஞர்களின் கனவுகளை மேலும் வலுவாக்கும்.
பிரதீப் ரங்கநாதனின் கல்லூரி முதல்வராக வரும் மிஷ்கின் மூலம் கதையைத் தொடங்கி, அவரிடமே கதையை முடித்திருக்கும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கதை சொல்லும் விதத்தில் புதிய பாணியை பதிய வைத்திருக்கிறார்.
ட்ரம்ப் கால சர்வதேச அரசியல் பொருளாதார அரங்கில் ஒரு சாதாரண இளைஞன் எதை விரும்புவது என்று அறியாத ஒரு எந்திரமாக மாறிவிட்ட சிக்கலை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நன்றாகவே படம்பிடித்திருக்கிறார்.
ஆசைகளின் எல்லைகள் உடைந்துவிட்ட தற்கால வாழ்வியலின் வரம்புகள் படத்தை மீறியும் நிலைக்கும் என்ற இயக்குனரின் நம்பிக்கை வெற்றியாக மாறியிருக்கிறது.
படத்தின் வெற்றி நவீன கால இளம் மனங்களின் வணிக ஆசைகளையும், மதிப்பீடுகளின் மாறா பிம்பங்களையும் மீண்டும் பறைசாற்றுகிறது.