டூரிஸ்ட் ஃபேமிலி.
அகதி என்பது ஒரு மன நிலை.
நாட்டை விட்டு நாடு வந்தவர்களிடம்தான் அது இருக்க வேண்டும் என்பது இல்லை. ஒரே சமூகத்தில், ஒரே சூழலில், ஒரே அலுவலகத்தில், ஒரே வீட்டில் இருப்பவர்கள்கூட அகதி மன நிலையை அடைய முடியும்.
அகதி மன நிலையின் அவலத்தைத் துல்லியமாக வடித்திருக்கும் படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி.’
இலங்கையிலிருந்து வரும் ஒரு குடும்பம் எப்படி சமூக ஓட்டத்தில் ஒன்றிப் போகிறது என்பதைப் படம் பல நல்ல காட்சிகளுடன் விவரிக்கிறது.
மிகவும் தேர்ந்த திரைக்கதை, நடிப்பு வெளிப்பாடு, அறிவார்ந்த இயக்கம் மூலம் புதிய இயக்குனர் அபிஷன் ஜிவிந்த் ஒரு அருமையான படத்தை உருவாக்கியிருக்கிறார்.
காட்சிக்குக் காட்சி பார்வையாளர் நெகிழ்ந்து போகும்படியான உணர்வுச் சிதறல்களை படம் முழுக்க அவர் வடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு, இசை என்று அனைத்து அம்சங்களிலும் படம் நேர்த்தியாக இருக்கிறது.
நடிகர் சசிகுமார் ஒரு அருமையான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
மற்ற நடிகர்களும் சிறிதும் சளைக்காமல் படத்தின் தேவைக்கு ஈடு கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு அகதி எப்போதும் இணக்கமாக இருக்க வேண்டும். ஒரு அகதி பொய்யும் சொல்ல வேண்டும். ஒரு அகதி மற்றவர்களிடம் அதீத பற்றைக் காண்பிக்க வேண்டும். ஒரு அகதி மற்றவரின் நன்மதிப்பைப் பெற வேண்டும். ஒரு அகதி மகிழ்வாக இருக்க வேண்டும் என்றால் ஒரு படி மேலே சென்று இயங்க வேண்டும்.
ஒரு அகதி எப்போதும் குற்றவுணர்வுடன்தான் வாழ வேண்டும். அதுவே வாழ்வின் அவலம் என்பதைப் படம் ஆழமாக விதைத்துவிடுகிறது.
ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்தப் படம் உள்ளது.
——–