என்னைக் கனவு கண்ட நாய் தூக்கம் கலைந்து திரும்பிப் பார்த்தது. கண்களின் ஓரத்தில் இருந்த விறைப்பும் முறைப்பும் கலக்கம் தந்தது. வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் வரும் வரையிலான என் பயணம் அதற்குத் தெரிந்திருந்தது. அதைக் கனவில் கண்டு எதற்கும் தயாராக இருந்தது அது.
படிக்கட்டுத் தாண்டிப் போக முடியாதபடி எப்போதும் கால் விரித்து வால் நீட்டி நாய் படுத்திருந்தது. அதன் உடலில் சிறு உரசல் பட்டாலும் என் உடலின் கணிசமான சதையைப் பிய்த்துப் போட்டுவிடும் உறுதி அதன் உடலில் தெரிந்தது. ஒரு மயிரிழைகூட அதன் மீது படாமல் ஒவ்வொரு நாளும் நான் படி தாண்டும் வித்தை கண்டு அது உள்ளூரச் சிரித்துக்கொண்டது.
எனக்கு நாய் என்றால் பெரும் பயம். தொலைவில் வாலாட்டிக்கொண்டு ஓடும் நாய்கூட திரும்பி வந்து தன் வெறிப் பற்களை நீட்டி என்னைக் கீறிச் சாய்த்துவிடும் என்று எப்போதும் கற்பனையில் நடுங்கும் அளவுக்கு என்னை நாய்கள் பயத்தில் ஆழ்த்தியிருந்தன.
என்னை எந்த நாயும் கடித்ததில்லை. எட்டாவது வகுப்பின் போது ஊரில் ஒரு இருள் தெருவில் ஒரு வெள்ளை நாய் துரத்தியபோது யார் என்று தெரியாதவர் வீட்டில் நுழைந்து கதவு மூடியபோது நெஞ்சு அடித்துக்கொண்டது. மனைவியைக் கொஞ்சிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளர் வெறுத்து முறைத்தார். சப்தம் கேட்டு முன்னறைக்கு வந்த கல்லூரி மாணவி என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அந்தப் பார்வை எப்போதும் உள்ளூரக் கிளர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அதைத் தொடர்வது நாய்க் கடியைவிட கொடுமையானது என்ற சிந்தனை விலகி ஓட வைத்தது. நாய் அச்சமும் அந்தப் பெண்ணின் நினைவும் வாழ்வெல்லாம் துரத்தின.
அலுவலகப் படிக்கட்டில் படுத்துறங்கும் நாய் என்னைக் கடிக்கும் நோக்கம் கொண்டதா என்று சொல்ல முடியாது. அது குறித்த என் பயத்தைக் கண்டு உள்ளூர மகிழும் எண்ணமே அதற்கு அதிகம் இருந்திருக்க வேண்டும். நான் பதறி அதன் மீது விழப் போனால் அப்போது பதம் பார்த்துவிடலாம் என்று அது காத்திருந்தது. அது போன்ற கணங்களைத் தவிர்த்து நான் கவனமாக நடைபோடுவது கண்டு அதற்குக் கேலியாக இருந்தது. நான் தவறு செய்துவிடும் ஒரு உன்னதக் கணத்திற்காக அது காத்திருந்தது.
எப்படியும் ஒரு நாள் அது என் மீது பாய்ந்து நாசம் தந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எனக்கும் இருந்தது. அதன் கோரைப் பற்கள் என் துடையில் பதிந்து இரத்தம் வரலாம். அல்லது என் விரல்களை அது கீறி துவம்சம் செய்யலாம். எதிர்பாராத கணத்தில் என் முதுகில் அது பல் பதித்து வலி தந்துவிடலாம். எதுவாக இருந்தாலும் நான் உடனே மருத்துவமனை செல்ல வேண்டும். நாய்க்கடி மருந்தை நான் போட்டுக்கொள்ள வேண்டும். சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிடலாம். அல்லது வீட்டில் படுக்கையிலேயே கழிக்க நேரிடலாம். மீண்டு வர பல வாரங்கள்கூட ஆகலாம். அல்லது நாயின் விஷம் என்னுள் பரவி நான் வலிப்பு நோய் வந்து முகமும் மனதும் மாறி இறுகி உறையக் கூடும். நாய்க்கடி எப்போது வேண்டுமானாலும் ஏற்பட்டு என்னை நிர்மூலம் ஆக்கக் கூடும். அதற்கு நான் தயாராகத்தான் இருந்தேன்.
ஆனால் அந்த நாய் என்னைக் கடிக்கவில்லை.
நகரத்தின் வெளியே ஒரு தெருவில் போன சிறுவனை இரண்டு தெரு நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்து நாராசம் ஆக்கின. சிறுவனின் முகம் தவிர அனைத்துப் பகுதிகளும் நாய்க் கடியால் இரத்தக் களறி ஆயின. அந்த நிகழ்வின் காணொளிகள் சமூகவலைதளங்களில் பரவி பதைபதைக்க வைத்தன. கோபம் அடைந்த தெருவாசிகள் அந்த நாய்களில் ஒன்றை அடித்துக் கொன்றனர். அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வு நடந்து இரண்டே நாட்களில் மாநிலத்தின் வேறு ஒரு பகுதியில் ஒரு சிறுமியை ஒரு நாய் துரத்தி அழ வைத்தது. அடுத்தடுத்து இது போன்ற நிகழ்வுகள் அரசு அதிகாரிகளைச் செயல்பட வைத்தன.
நகரின் நாய்களைப் பிடித்துப் போய் அவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சையும் நோய்ப் பரவல் தடுப்பு ஊசியும் போட்டு அனுப்பினர். நாய்களை எங்கு பிடித்தார்களோ அங்கேயே கொண்டு வந்து அவர்கள் விட்டனர். தடுப்பூசி போடப்பட்ட நாய் கடித்தால் விஷம் ஏறாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். ஆனால் நாய்க்கடியின் வலியும் இரத்தமும் துயர்தான் தரும் என்பது எப்போதும் அச்சத்தை நிலையாக வைத்தது.
என் அலுவலக வளாகத்தில் இருந்த நாய் காணாமல் போனது. அது என்னைக் கனவு கண்டு உறங்கும் இடம் வெற்றிடமாக வெறிச்சோடியது. அதற்காக யாரோ வைத்த தயிர் சாதம் காய்ந்துபோனது. மேரி பிஸ்கெட் பொடியாகிக் கிடந்தது. அது தின்ன வைத்திருந்த உணவுப் பொருள்கள் அது இல்லாமல் போனதன் துயரைத் தந்தன. காணாமல் போனதற்குப் பதிலாக அது என்னைக் கடித்துவிட்டு அதே இடத்தில் உலவிக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை போலத்தான் மனதில் வெறுமை சூழ்ந்தது.
அதே சமயத்தில் அந்தச் சாலையில் ஓடித் திரிந்த மற்ற நாய்களையும் காணவில்லை. அந்தப் பகுதியின் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள் என்று புரிந்தது. அவர்கள் இதே இடத்தில் அந்த நாய்களை விட்டுவிட கொஞ்சம் காலம் ஆகலாம். அப்போது அந்த நாய்கள் இந்தப் பகுதியின் தனித்தன்மையை மறந்துகூட போயிருக்கும்.
என் அலுவலக நாய் அதன் கனவில் என் நிலையைத் துல்லியமாகக் கண்காணித்து வந்தது. அந்த நாய் இல்லாத படிக்கட்டுகளை நான் சிறிதும் பயம் இன்றிக் கடப்பதையும் அது இல்லாததன் வெற்றிடத்தின் அவலத்தை மனதில் இறுத்திக் கனத்துக் கிடப்பதையும் அது உள்ளூர ரசித்துக்கொண்டிருந்தது. அதற்கு மயக்க மருந்து கொடுத்தபோது கனவும் விழிப்பும் மறந்த ஒரு நிலையிலும் அது என் பிம்ப அசைவுகளை மூளையில் அசைபோட்டு உலவியது. அதன் இனப்பெருக்க சுரப்பிகள் அகற்றப்படும் கணங்களையும் ஒரு நாடகம் போலப் பதிவிட்டுக் கொண்டது. மயக்கம் முடிந்து வலி நிவாரணிகள் உட்செலுத்திய பின்னும் உடலில் ஓடிய மெல்லிய வலியில் அது முனகித் தவித்தது. அப்போது வந்த கனவில் என் உருவம் அதன் இலக்கிலிருந்து மெல்ல நகர்ந்துபோகிறதோ என்று அது கவலை அடைந்தது. என்னை நழுவ விட்டுவிடக் கூடாது என்ற உறுதி அதன் மனதில் இறுகிப் போனது. ஒரு கணம் பாய்ந்து அது என் துடையைக் கவ்வியது. நான் வலியால் துடித்து படிகளில் அமர்ந்துகொண்டேன். வெறி தீர்ந்த திருப்தியில் அது என்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே வெளி வாசல் வழியாக ஓடி மறைந்தது. அதன் கால் பதிப்பில் தெரிந்த ஆவேசத்தின் தீவிரம் என் மனதில் உடல் வலியைவிட அதிகமாக ஒலித்து அச்சுறுத்தியது.
என் வலி கண்டு கை கொடுக்க யாருமே இல்லையோ என்று நான் குமைந்து அமர்ந்திருந்தேன். எழவும் முடியாத வேதனை உடலை வாட்டியது. கடித்துவிட வேண்டும் என்று நினைத்த நாய் அதன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டதை நினைத்துக் கடுப்பாக வந்தது. எழுந்து தண்ணீரில் காயத்தைக் கழுவலாம் என்று எண்ணியபோதுதான் அந்தப் பெண் படிகளில் தென்பட்டாள். யாரோ என்று முகம் திருப்பிக்கொண்டு செல்ல நினைத்தவள் நான் ஒரு அவலத்தில் இருப்பதைப் புரிந்துகொண்ட ஒரு சந்தேகத்தில் என் திசையைப் பார்த்தபடி இருந்தாள். என் அருகில் வர விரும்பியவள் போலத்தான் அவள் இருந்தாள். நானும் என் முக பாவனையில் என் வலியைப் பிரதிபலித்தேன். அவள் உடனே பதறிப் போய் என் அருகில் ஓடி வந்தாள். சற்றும் எதிர்பார்க்காதபடி அவள் எனக்குக் கை கொடுத்தாள். அவள் முகம் என் முகம் அருகே வந்து போனது. காதோரம் கொஞ்சம் நரை தெரிந்தது. ஆனால் முகத்தில் ஒளிர்ந்த இளமை எல்லையற்றுச் சிலிர்த்தது. பள்ளிக் காலத்தில் நாய்க்குப் பயந்து நான் நுழைந்த பக்கத்துவீட்டுப் பெண்தான் அவள் என்று எனக்கு உடனே புரிந்தது. அதைப் புரிந்துகொள்ளாத வகையிலான அவளுடைய பாவனை என்னை உறுத்தியது. பள்ளிக் காலத்தில் அவளிடம் கண்ட கிறக்கத்தில் அவளை உற்றுப் பார்ப்பதை அவள் நிராகரித்தபடியே இருந்தாள். வளர்ந்த பின்னால் அனைவரும் ஒன்றுதான் என்பதை அவள் ஏற்காதவளாகவே இருந்தாள். நாய் கடித்த வேதனை மட்டுமே எனக்கு முக்கியமாக இருக்க வேண்டும் என்ற வகையில் அவள் இயங்கினாள். அவளுக்கு என்னை அடையாளம் தெரிந்தபோதும் நான் ஒரு இளைஞன்தானே என்ற உதாசினம் அவளிடம் வெளிப்பட்டது. அவளுடைய நிராகரிப்பின் வேதனையும் நாய்க்கடியின் வலியும் என்னை அவலத்தில் அலைமோத வைத்தன. பள்ளிக் காலத்தில் கண்ட அவளுடைய வசீகர மோவாய் என் கண் எதிரே வந்து நகர்ந்தது. அவள் என்னைக் கைப்பிடித்தபடி முதல் தளத்தின் கழிவறைக்கு அழைத்துப் போனாள். அங்கு வாஷ் பேசினில் இருந்த குழாயில் இரண்டு கைகளில் தண்ணீர் பிடித்து என் துடையில் இருந்த நாய்க் கடியின் காயத்தில் கொட்டினாள். அப்போது அவளுடைய முதுகில் இருந்த அலாதியான கவர்ச்சியில் எனக்கு நாய்க்கடி மறந்து போனது. அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடியே நான் இருந்தேன். அவள் அதை ஏற்றுக்கொண்டாலும் முழுக்க அங்கீகரிக்க மாட்டாள் என்பது போலவே இருந்தாள். என் வேதனை கண்டு இன்னும் பலரும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். அவள் ஒருத்தியே என்னைக் கவனித்துக்கொள்வாள் போன்ற பாவனை காட்டியதால் மற்றவர்கள் என் மீது முழுமையான அக்கறை காட்டாமல் விலகி நின்றார்கள். அவளும் தான் வந்த காரியம் முடிந்துபோனது என்று என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு நகர்ந்துபோனாள். நான் நன்றியுடன் பதில் புன்னகை வெளிக்காட்டுவதற்கு முன்னால் தலை திருப்பி அவள் நடந்தாள். அப்போதுதான் அந்த நாய்க்கடி கடுமையாக வலித்தது.
மருத்துவமனையில் நாய்க்கடி தடுப்பூசி சர்ரென்று ஏறி அடங்கியது. வலிப்பு நோய் வராமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அச்சமும் கவலையும் காட்டினார். அந்த நாய் கனவில் சிரித்துக்கொண்டது. இனி என் நாய் அச்சமும் அதிகரித்துவிட்டது. அதன் கடி தருகிற நோயின் அச்சமும் அதிகரித்துவிட்டது. சாலைகளில் இனி நான் முன்பு போல் நடக்க முடியாது. எப்போதும் நாய் ஒன்றின் பற்கள் என் உடல் அருகே நிழலாடிக்கொண்டிருக்கும் படபடப்புதான் எனக்குள் அமிழ்ந்திருக்கும் என்பது நாய்க்குப் புரிந்து உள்ளூர அது மகிழ்ந்தது. அதிலிருந்து நான் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பது போன்றுதான் அது தன் கனவை வடிவமைத்துக் கொண்டது.
மெதுவாகத் தெருவில் நாய்களின் நடமாட்டம் அதிகரித்தது. பிடித்துச் சென்ற நாய்களை சரியான சிகிச்சை கொடுத்து அதிகாரிகள் மீண்டும் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். நாய்களும் மீண்டும் தங்கள் பகுதிகளில் தங்களை தகவமைத்துக்கொள்ள மிகவும் சிரமம் அடைந்தன. எந்த நேரமும் பிடிக்கப்பட்டுவிடும் அபாயம் அவற்றின் இயக்கத்தில் தெரிந்தது. நடையிலும் ஓட்டத்திலும் மிகுந்த எச்சரிக்கை கொண்டவையாக அவை மாறிப்போயின. அவற்றைக் கடக்கும் எந்த ஒரு வாகனமும் அவற்றின் இருப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போல அவை நகர்ந்துபோயின. மனிதர்களை இனி நம்பவே கூடாது என்று அவை தங்கள் கண்களில் பாவனை காட்டின.
பல நாய்கள் மீண்டும் தெருக்களில் எதிர்ப்பட்டபோதும் என் அலுவலகப் படிக்கட்டுகளில் ஊறங்கிப் பயமுறுத்திய நாய் மட்டும் காணவே இல்லை. அது வேறு ஒரு இடத்தில் விடப்பட்டு அலைந்து திரியலாம் போலத்தான் இருந்தது. அல்லது எங்கோ ஓரிடத்தில் உறங்கி கனவு கண்டு என்னை அது இயக்கிக்கொண்டிருந்தது. என் படபடப்பும் பரிதவிப்பும் அதன் தீராத மகிழ்வாகப் மாறிப்போயிருந்தது. மற்றவர் துயரில் இனிமை காணும் மனம் கொண்டதாக அந்த நாய் இருந்திருக்க வேண்டும்.
அலுவலகத் தெருவில் நாய்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே போனது. மற்ற தெருக்களின் நாய்களும் இங்கு கூடி நகர்ந்து போயின. தெரிந்த நாய்கள் போலவும் தெரியாத நாய்கள் போலவும் அவை ஓடிக்கொண்டே இருந்தன. என் அலுவலகப் படிக்கட்டில் உறங்கிக் கழிக்கும் நாய் மட்டும் அந்த நாய்களின் கூட்டத்தில் இல்லாமலேயே போனது.
ஒரு நாள் அது வந்துவிடும் போலத்தான் இருந்தது. அது படுத்துறங்கும் படிக்கட்டின் வெறுமையும் எப்போதும் போலவே இறுக்கம் உறைந்ததாக இருந்தது. அந்த வெற்றிடத்தின் துயரை தன் கனவின் விரிவாக அது செயல்படுத்திக்கொண்டிருந்தது. அங்கு உடைந்து சிதறியிருந்த பிஸ்கெட் துண்டுகளும் அதன் வரவுக்காக காத்திருப்பவை போல அது சித்தரித்து வைத்திருந்தது.
எதிர்பாராத கணம் ஒன்றில் அந்தத் தெருவில் ஒரு நாய்க் கூட்டம் உற்சாகமாக ஓடித் திரிந்தது. அதில் எனக்குத் தெரிந்த நாயும் கலந்து சிலிர்த்தது போல இருந்தது. அதன் போக்கை நின்று கவனிக்கும் இயல்பு என்னிடம் சுத்தமாக இல்லாமலேயே போனது. அந்த நாய்களின் ஏதோ ஒன்று ஓடி வந்து என்னுடைய கையையோ காலையோ பிராண்டிக் கடித்துவிடும் போலவே எனக்குள் அதிர்வு ஓடியது. மீண்டும் ஒரு நாய்க்கடியைச் சந்திக்கும் திராணி என்னிடம் இருக்கவில்லை.
எங்கிருந்தோ அந்தப் பெண் அந்த நாய்க்கூட்டத்தின் மத்தியில் தோன்றினாள். அந்தப் பெண்தான். என் பள்ளிக் கால நாய் பயத்தில் ஒதுக்கிய வீட்டில் தென்பட்ட பெண். நான் நாய்க்கடி பட்டபோது என்னைப் பிடித்துச் சென்று முதலுதவி சென்று நிராகரித்தப் பெண். அவளைப் பார்த்ததும் நான் அந்த நாய்க்கூட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். எனக்குத் தெரிந்த நாய் இருக்குமா என்று என் கண்கள் தேடின. அந்த நாய்களின் முகங்களை எல்லாம் ஒற்றை முகம் போல மாற்றும் முக்கியத்துவத்தை அந்தப் பெண்ணின் அசைவுகள பெற்றிருந்தன. நான் எப்படியும் அந்த நாயைத் தேடித்தான் வருகிறேன் என்பது போல அவள் முகத்தில் ஒரு புன்னகையும் நெற்றியில் எதிர்பார்ப்பின் உறுதியும் கொண்டவளாக அவள் இருந்தாள். நாய்களின் மத்தியில் அவள் அமர்ந்துகொண்டு என் வரவை நோக்கியிருந்தாள்.
நான் அருகில் சென்றேன். அந்த நாய் இருந்தது. ஆனால் அவள் காணாமல் போயிருந்தாள். எனக்கு அச்சமாக இருந்தது. இல்லை. அவள் இருந்தாள். அந்த நாய்தான் காணாமல் போயிருந்தது. அவள்தான் பல் காட்டிச் சிரித்தாள். கூர்மை கொண்ட கடைவாய்ப் பல்லால் என்னைக் கடித்துவிடுவாள் போலத்தான் அவள் கண்களில் கோபம் காட்டினாள். நான் அதை எதிர்பார்த்தது போலே இருந்தேன். ஒரு கடியைக் கொடுத்துவிட்டு துயரின் மகிழ்வை என்னிடம் விதைத்துவிடக் கூடாது என்ற பூச்சாண்டியை அவள் காட்டியபடி இருந்தாள். மற்ற நாய்கள் இந்த விளையாட்டை வேடிக்கைப் பார்த்தபடி இருந்தன. அவற்றின் முகங்களில் விளையாட்டைப் பார்க்கும் உற்சாகம் இருந்தது. அவள் என்னைக் கடிக்கவே வந்தாள். நான் அதற்கு என்னை அர்ப்பணித்தேன். அந்த நாய் இன்னும் கனவு கண்டபடியே இருந்தது.
*****