ஊடகங்களில் ‘என்பவர்’ தவிர்க்க!
அரியலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்மறவன் என்பவரை நீக்கி அவருக்குப் பதில் காடுவெட்டி ரவி என்பவரையும், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி என்பவரை நீக்கி, அப்பொறுப்பில் சக்திவேல் என்பவரையும் டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார்.
- என்று ஊடகங்கள் பதிவிட்டன.
அந்தப் பிரமுகர்கள் அவர்களின் கட்சியில் அறியப்பட்டவர்கள்தானே. அவர்களை என்பவர் என்று ஏன் குறிப்பிட வேண்டும்?
அரியலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்மறவனை நீக்கி அவருக்குப் பதில் காடுவெட்டி ரவியையும், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமியை நீக்கி, அப்பொறுப்பில் சக்திவேலையும் டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார்.
- என்று ஊடகங்கள் குறிப்பிடலாமே!
————
‘பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரர் பூர்ணம் குமார் சாகு என்பவர் தவறுதலாகச் சென்று மாட்டிக்கொண்டார்’
- என்று ஊடகங்கள் பதிவிட்டன.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள், பூர்ணம் குமார் சாகு என்ற இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரர் தவறுதலாகச் சென்று மாட்டிக்கொண்டார்
- என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
அல்லது
பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள், எல்லைப் பாதுகாப்புப் படையைச் (பி.எஸ்.எப்.) சேர்ந்த பூர்ணம் குமார் சாகு என்ற வீரர் தவறுதலாகச் சென்று மாட்டிக்கொண்டார்
- என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
————
சட்டத்தை ரத்து செய்யக்கோரி நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்
- என்று ஊடகங்கள் பதிவிட்டன.
சட்டத்தை ரத்து செய்யகோரி நெல்லையைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்
- என்று பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்.
——————-
ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவர் பயணிகளுக்கு உதவினார்
- இப்படி ஊடகங்கள் பதிவிடுகின்றன.
குமாரை ஆட்டோ ஓட்டுநர் என்று அடையாளம் கூறியாகிவிட்டது. பிறகு ’என்பவர்’ என்ற சொல் அவசியம் இல்லை.
ஆட்டோ ஓட்டுநர் குமார் அறிமுகம் இல்லாதவர் என்பதால்…
குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் பயணிகளுக்கு உதவினார்.
- என்று கூறலாம்.
——————